இலங்கையின் இறையாண்மைக்கு ஐ.நா. சபை மதிப்பளிக்கவேண்டும் – அரசு வலியுறுத்தல்
“இலங்கையின் மீது நிரூபிக்கப்படாத மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அமைதிகாக்கும் படையின் பங்களிப்புக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதனினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறுப்புடைய மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பாக வ்இளங்குவது ஐக்கிய நாடுகள் சபை. அதன் உறுப்புரிமை நாடுகளுடனான தொடர்புகளின்போது அவற்றின் இறையாண்மைக்கு முழுவதுமாக மதிப்பளித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.”
– இவ்வாறு இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஜேர்மனியினால் ‘அமைதி நடவடிக்கைகளும் மனித உரிமைகளும்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்த விவாதத்துக்கென இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்ட நீண்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“நாடுகளுக்குள்ளே காணப்படும் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றினால் மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு சார்பற்ற கட்டமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்கள், சுகாதார நெருக்கடிகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக இத்தகையதொரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருக்கும் ஜேர்மனியின் முயற்சியை வரவேற்கின்றோம்.
அத்தோடு பல தசாப்தங்களாக பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியிலும் அமைதியை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்காகக்கொண்டு செயற்பட்ட ஆயிரக்கணக்கான ஆண், பெண் உத்தியோகத்தர்களுக்கு எமது கௌரவத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இலங்கையும் தொடர்ச்சியாக அதன் பங்களிப்பை வழங்கி வருவதையிட்டுப் பெருமையடைகின்றோம். ஐ.நா அமைதிப்படையின் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிக முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது.
அந்தவகையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அமைதி காத்தல் என்பவற்றில் இலங்கை முழு உறுதியுடன் இருப்பதுடன், இலங்கையின் சார்பில் அமைதிகாக்கும் படையில் பணிபுரியும் வீரர்களுக்கு இவ்விடயங்களில் முழுமையான கோட்பாட்டு அறிவும் செயன்முறைப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையில் பொலிஸாருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்குமான பயிற்சி வழங்கலில் மனித உரிமைகளும் ஓரங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கத்தால் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன தொடர்பில் இராணுவத்துக்கும், பொலிஸாருக்கும் விசேட பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன” – எனக்கூறப்பட்டுள்ளது.