தேர்தலில் அக்கறையில்லாத வடக்கு, கிழக்கு மக்கள் – மஹிந்த தேசப்பிரிய
“வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களிடம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளது.”
– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று ஊடக பிரதானிகளைச் சந்தித்தபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாராளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும்.
கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தலைவிட மக்களின் உயிரே எமக்கு மேலானது.
இம்முறை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் அதிக தடவை செனிடைசர் பயன்படுத்த உள்ளமையால் இதற்கு மாத்திரம் மில்லியன் கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. வழமையாக நடைபெறும் தேர்தலை விட இம்முறை தேர்தல் முற்றிலும் வித்தியாசமானது.
அதாவது தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் சற்று வித்தியாசமாக காணப்படும். இதனால் இம்முறை தேர்தலுக்கு வழமையை விட அதிக நிதி செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
சர்வாதிகார நாடு என்றால் இவ்வாறான தேர்தல் செலவீனங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜனநாயக நாட்டில் தேர்தலை நடத்தும்போது தேர்தல் செலவீனங்களைத் தவிர்க்க முடியாது” – என்றார்.