மக்கள் எம் பக்கம்; வெற்றி நிச்சயம். தேர்தலில் எமக்கேன் இராணுவம்? – மஹிந்த
“நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சிக்கு ஆணை தந்த மக்கள், மீண்டும் பொதுத்தேர்தலிலும் ஆணை வழங்கக் காத்திருக்கின்றார்கள். இந்தநிலையில், எமது ஆட்சியைத் தக்கவைக்க இராணுவத்தினர் எதற்கு? அவர்கள் தங்கள் பாதுகாப்புக் கடமைகளைத் திறம்படச் செய்கின்றார்கள்.”
– இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இராணுவத்தினரைப் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தி அவர்களின் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க அரசு முயல்கின்றது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“நாட்டு மக்கள் எமது பக்கமே இருக்கின்றார்கள். பொதுத்தேர்தலில் எமது கட்சியின் வெற்றி ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஆட்சி அதிகாரத்தை நாம் பெறுவது உறுதி. எனினும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையே எமது பிரதான இலக்கு. அந்த இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இந்தநிலையில், எமது மக்கள் பலத்தைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் இராணுவம் என்று பிதற்றுகின்றார்கள். அவர்களின் கருத்துக்களைத் தூக்கிக் குப்பையில் வீசுங்கள்” – என்றார்.