தமிழர் தலைநகர் திருகோணமலையை எவருக்கும் தாரைவார்க்க மாட்டோம் – சம்பந்தன்
“தமிழர்களின் தலைநகரான திருகோணமலையையும், இங்குள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும் எவருக்கும் தாரைவார்க்கவேமாட்டோம். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித தலம் – இலங்கையில் தேவாரப் பாடல் பெற்ற தலம். இதற்குப் பௌத்த மதத்தவர்கள் உரிமை கோர முடியாது”.
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
‘திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“திருக்கோணேஸ்வரம் கோயில் அல்ல; அது கோகண்ண விகாரை என்று எல்லாவல மேதானந்த தேரர் கூறும் கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம்.
தொல்பொருள்களைப் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களின் பூர்வீக இடங்களினதும் இந்துக்களின் புனித தலங்களினதும் வரலாற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலணி முன்னெடுக்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கவேமாட்டோம்.
இனவாத – மதவாதப் போக்கில் ஜனாதிபதி செயலணி செயற்பட்டால் அது நாட்டுக்குத்தான் பாதக விளைவுகளை ஏற்படுத்தும்” – என்றார்.